Published : 23 Dec 2013 03:14 PM
Last Updated : 23 Dec 2013 03:14 PM
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமரைச் சந்தித்து மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என்று பாமக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைச் சிறையில் வாடும் 210 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என 3000-க்கும் மேற்பட்டோர் நாகப்பட்டினத்தில் கடந்த சனிக்கிழமை முதல் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர்.
நாகப்பட்டினத்தில் உள்ள இன்று ஒருநாள் கடையடைப்பு நடத்துவதுடன், மீனவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
நடப்பாண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை 3 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைப்பதுடன், அவர்களின் படகுகளையும் நாட்டுடைமையாக்கி விடுவதால் அவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழகத்தில் இருந்து எழுப்பப்படும் குரல்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்பதால், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்" என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT