Published : 23 Dec 2013 07:09 PM
Last Updated : 23 Dec 2013 07:09 PM
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் ரூ. 27 கோடியே 5 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட இருதய அறுவை சிகிச்சைப் பிரிவுக்கான முழு தானியங்கி ஆய்வகம், நூலகம் போன்றவற்றின் திறப்பு விழா, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் புதிய கட்டடங்களை திறந்து வைத்தனர். அதேபோல, மருத்துவமனை வளாகத்தில் புதிய நடைத்தளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அவர்கள், மருத்துவமனைக்குத் தேவையான சில மருத்துவ உபகரணங்களையும் வழங்கினர்.
நெல்சன் மண்டேலா மறைவால், முன்பு இதே அமைச்சர்கள் பங்கேற்கவிருந்த விழா ரத்து செய்யப்பட்டதால், அப்போது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மதுரை மருத்துவக் கல்லூரிக்கான கோப்பையை இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், “மக்கள் நலனில் கொண்ட அக்கறையால், முதல்வர் ஜெயலலிதா முதல் அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 1016 நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள், 113 தொடர் சிகிச்சைகள், 23 வகையான நோய்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்தக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் மட்டும் 5,45,240 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 48,096 பேர் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் ரூ. 27 கோடியே 5 லட்சம் கிடைத்துள்ளது. இந்த வருவாயை மருத்துவமனையின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்து வசதிகளையும் கொண்ட மருத்துவமனையாக மதுரை ராஜாஜி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கவும், நோயாளி களுக்கு கனிவுடன் சேவையாற்றவும் மருத்துவர்களும், பணியாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ந.மோகன், மருத்துவக் கண்காணிப்பாளர் மீனாட்சி சுந்தரம், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், மேயர் ராஜன் செல்லப்பா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், எம்.முத்துராமலிங்கம், கே. தமிழரசன், எம்.வி.கருப்பையா, ஆர்.அண்ணாத்துரை, துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய வசதிகள் என்னென்ன?
இந்த விழாவில் அமைச்சர்கள் வழங்கிய, தொடங்கி வைத்த புதிய வசதிகள். ரூ.3.5 லட்சத்தில் நவீனமயமாக்கப்பட்ட முழு உடல் பரிசோதனைப் பிரிவு, ரூ.25 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான அதிதீவிர சிகிச்சை வார்டு, ரூ.14 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட நவீன தீக்காய சிகிச்சைப் பிரிவு, கண் பிரிவு, ரூ.9 லட்சம் செலவில் இருதய சிகிச்சைப் பிரிவில் மேம்படுத்தப்பட்ட முழு தானியங்கி ரத்தப் பரிசோதனை கருவி, ரூ.18 லட்சத்தில் சிறுநீரகப் பிரிவில் 3 ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) இயந்திரங்கள், ரூ. 4.5 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, ரூ.4 லட்சம் செலவில் கட்டப்பட்ட அறுவை சிகிச்சைப் பிரிவு நூலகம். இதில் பெரும்பாலான அறிவிப்புகள் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT