Published : 16 Dec 2013 02:14 PM
Last Updated : 16 Dec 2013 02:14 PM
ஏற்காடு இடைத்தேர்தலில் காங்கிரசின் ஆதரவைக் கேட்ட போது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம், கருணாநிதிக்கு ஞாபகம் வராமல் போனது ஏன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, நிருபர்களிடம் திங்கள்கிழமை ஞானதேசிகன் கூறியதாவது:
யாருடன் கூட்டணி என்று முடிவு செய்யும் உரிமை, ஒவ்வொரு கட்சிக்கும் உள்ளது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளதில் எங்களுக்கு வருத்தமோ, மாற்றுக்கருத்தோ இல்லை.
ஆனால், ராசாவையும் கனி மொழியையும் வேண்டுமென்றே 2 ஜி வழக்கில் காங்கிரஸ் சிக்க வைத்தது போன்று, மக்கள் மத்தி யில் தவறான பிரச்சாரம் செய்ய முயற்சிப்பதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவை காங்கிரஸ் இயக்கியிருந்தால், சொந்த கட்சி எம்.பி.யான சுரேஷ் கல்மாடி மீது வழக்கு பதிவு செய்திருக்குமா? சி.பி.ஐ. விசாரணையை, மத்திய அரசு எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, மூன்று மத்திய அமைச்சர்கள் சென்னைக்கு வந்து கருணாநிதியை சந்தித்து பேசினர். நல்ல முடிவை சொல்கிறோம் என்று கூறிவிட்டு டெல்லி சென்றனர். ஆனால், மத்திய அரசின் முடிவை அறிந்துகொள்ளும் முன்பே கூட்டணியில் இருந்து விலகுவ தாகவும் மறுநாளே மத்திய அமைச்ச ரவையில் இருந்து விலகுவதாகவும் கருணாநிதி அறிவித்தார்.
அப்போதிருந்தே காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் கூட்டணி இல்லை. நாங்கள் தனியாகத்தான் செயல்படுகிறோம். எனவே, கருணாநிதியின் தற்போதைய அறிவிப்பு வியப்பைத்தான் தருகிறது. ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலின்போது காங்கிரசின் ஆதரவைக் கேட்டு கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். அப்போது ஏன் அவருக்கு 2 ஜி விவகாரம் ஞாபகத்துக்கு வரவில்லை?
நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு தாருங்கள் என்று திமுகவிடம் நாங்கள் கேட்கவில்லை. கடிதமும் எழுதவில்லை. காங்கிரஸைப் பொருத்தவரை, தமிழகத்தில் வலுவான நிலையில் உள்ளோம். எங்களால் தனித்து நின்றும் வெற்றி பெற முடியும். கடந்த 75, 89 மற்றும் 99ம் ஆண்டுகளில் தனித்து நின்றுதான் தேர்தலைச் சந்தித்தோம்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் மேலிடமும், செயற்குழு மற்றும் பொதுக்குழுவும் முடிவு செய்யும். இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு ஆக்கபூர்வமாக எவ்வளவு உதவிகள் செய்தது என்பது, ஏழரை ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுகவுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT