Published : 21 Dec 2013 04:29 PM
Last Updated : 21 Dec 2013 04:29 PM
கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 550 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2,650 ரூபாய் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கரும்பு உற்பத்தியைப் பெருக்கவும், கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும், சர்க்கரை உற்பத்தியை மேம்படுத்தவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. கரும்பு மகசூல் திறனில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் 8.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரும்பு உற்பத்தித் திறனை மேலும் உயர்த்தும் வகையில், நுண்ணீர் பாசன முறையை அறிமுகப்படுத்தி, இந்த முறையை கையாளும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருவதோடு, நுண்ணீர் பாசன மானியம் பெறுவதற்கான ஒரு ஏக்கர் என்ற உச்சவரம்பும் தளர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பத் திட்டத்தினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீரில் கரையும் உரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களை காலத்தே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், தோட்டக் கலைத் துறை ஆணையரகத்தில் சிறப்பு நோக்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு சுழல் நிதியாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு உற்பத்தியைப் பெருக்க இது போன்ற சலுகைகளை வழங்கி வரும் எனது தலைமையிலான அரசு, ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்கான, நியாயமான மற்றும் ஆதாய விலையை மத்திய அரசு உயர்த்தும் போதெல்லாம், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநில பரிந்துரை விலையை தொடர்ந்து வழங்கிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில், 2011-2012 ஆம் ஆண்டிற்கான கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றிற்கு 1,450 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு நிர்ணயம் செய்த போது, போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாய் உயர்த்தி 2,100 ரூபாயாகவும் ; 2012-2013 ஆம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றிற்கு 1,700 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்த போது, போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாய் உயர்த்தி 2,350 ரூபாயாகவும் வழங்க நான் ஆணையிட்டேன்.
தற்போது, 2013-2014 ஆம் ஆண்டிற்கான கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றிக்கு 2,100 ரூபாய் நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு அறிவித்த விலையைக் காட்டிலும், 2013-2014 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் பரிந்துரை விலையாக டன் ஒன்றிற்கு போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 550 ரூபாய் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிக்கு 2,650 ரூபாய் கிடைக்கும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மனமகிழ்ச்சியினை அளிக்கும்."
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT