Published : 02 Aug 2025 05:30 PM
Last Updated : 02 Aug 2025 05:30 PM
சென்னை: டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐபிஎஸ். அதிகாரி வருண்குமார் ஆகியோர் இடையே அண்மைக் காலத்தில் கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இருவரும் பரஸ்பரம் மாறிமாறி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனக்கு எதிராக பொது வெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளை தெரிவிப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் தனக்கு எதிரான அவதூறான, ஆதாரமில்லாத கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி, ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அந்த மனுவில், இரண்டு கோடியே பத்து லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்குக்கு எண்ணிட அனுமதிக்க கோரிய மனு, நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி, வழக்கு எண்ணிடும் நிலையில் உள்ளது. பதிலளிக்க அவகாசம் வழங்காமல் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எனவும், ஏற்கனவே, மதுரை அமர்வில் அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமாருக்கு எதிராக, சீமான் பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவிற்கு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT