திருப்பூர்: வங்கதேசத்தில் கைது செய்யப்பட்ட இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஆன்மிகத் துறவி சின்மயி கிருஷ்ணதாஸை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் இன்று (டிச.2) திருப்பூரில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: "இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானை பிரித்து வங்கதேச நாட்டை உருவாக்கினார். அந்த நாட்டின் பிரதமராக இருந்த சேக் ஹசீனா, மாணவர்கள் போராட்டத்தால் சமீபத்தில் அந்த நாட்டில் இருந்து விரட்டப்பட்டார். இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஆன்மிகத் துறவி சின்மயி கிருஷ்ணதாஸ், இந்துக்களை ஒருங்கிணைக்கும் வேலையை செய்து வந்தார். இந்நிலையில், தேச துரோக வழக்கில் அந்த நாட்டில் கிருணதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, வங்கதேச இந்து உரிமை மீட்புக்குழு கண்டித்துள்ளது. இதனிடையே, கிருணதாஸ் கைதை கண்டித்து வரும் 4-ம் தேதி, நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சின்மயி கிருஷ்ணதாஸை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் 4-ம் தேதி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் இந்து அமைப்புகள் உட்பட மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள் பங்கேற்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. ஆன்மிகத் துறவி கைது விஷயத்தில், மத்திய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக அரசாங்கம் சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாங்கமாகவே உள்ளது. நாளுக்கு நாள் சட்டம் - ஒழுங்கு தமிழ்நாட்டில் மிக மோசமாகி கொண்டிருக்கிறது" என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். இந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
WRITE A COMMENT