Published : 20 Nov 2024 07:17 PM
Last Updated : 20 Nov 2024 07:17 PM
மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த மலைராஜன், மணி உள்ளிட்ட 258 பேர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை சின்ன உடைப்பு பகுதியில் 350 குடும்பம் வசிக்கின்றன. பெரும்பாலானோர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக எங்கள் நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து எங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றிவிட்டு எங்கள் நிலங்களை கையகப்படுத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலங்களுக்கு மிகக் குறைவாகவே இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு மறு குடியமர்வு வசதிகளும் செய்து தரப்படவில்லை. நிலம் கையகப்படுத்துதல், மறுகுடியமர்வு செய்தல் தொடர்பான விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இங்கு நிலம் கையகப்படுத்தும் போது குடியிருப்பார்களுக்கு மாற்று இடம், வீடு, முறையான மறு குடியமர்வு வசதிகளும் செய்து தரப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது எதையும் முறையாக செய்யாமல், வலுக்கட்டாயமாக குடும்பங்களை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி, புல்டோசர் உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் அதிகாரிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா போன்ற வாகனங்களுடன் சின்ன உடைப்பு கிராமத்தில் குவிந்துள்ளனர். எந்த நேரத்திலும், எங்களது வீடுகளை இடித்து எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடலாம்.
எனவே, மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும், சின்ன உடைப்பு மக்களை மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு வசதிகளை முறையாக செய்து தரும் வரை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என்.மாலா முன்பு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘தொழில்துறை தேவைகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும் போது மறுகுடியமர்வு செய்துதரப்பட வேண்டும். நீர்நிலை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களுக்கு மாற்றிடம் வழங்கப்படுகிறது. தங்களது சொந்த நிலம், வீடுகளை அரசின் தேவைக்காக வழங்கும் இப்பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு நிச்சயம் செய்து தரப்பட வேண்டும். அதோடு தொழில்துறை சட்டப்படி யாருக்கும் நோட்டீஸ் வழங்கப்படவில்லை என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, இந்த விவாகரத்தில் தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்ட பிரிவின்படி ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். அதனைப் பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றலாம். அதுவரை மக்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. மனு தொடர்பாக தமிழக நில கையகப்படுத்துதல் பிரிவின் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT