Published : 17 Mar 2022 06:07 AM
Last Updated : 17 Mar 2022 06:07 AM

இந்திய தேர்தல் அரசியலில் பேஸ்புக் தலையிடுவதை தடுக்க வேண்டும்: மக்களவையில் சோனியா காந்தி பேச்சு

மக்களவையில் பேசிய சோனியா.

புதுடெல்லி: இந்திய தேர்தல் அரசியலில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தலையீட்டைத் தடுக்க வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பேசினார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது சோனியா காந்தி பேசியதாவது:

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதில்லை. ஜனநாயகத்தில் ஊடுருவ சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால் ஆபத்து அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் போன்றோரின் அரசியல் கதைகளை வடிவமைக்க அதிகம் பயன் படுத்தப்படுகின்றன.

ஆளும் கட்சிகளின் உடந்தையுடன் பேஸ்புக்கில் அப்பட்டமான முறையில் சமூக நல்லிணக்கத்தில் இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் அரசியலில் ஆதிக்கம் மற்றும் குறுக்கீடு செய்வதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது ரிலையன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் விதிகளை மீறி பாஜகவுக்கு ஆதரவாக விளம்பரம் செய்தன.

போலி விளம்பரங்கள், செய்தி நிறுவனங்கள் தரும் செய்திகள் போல பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகள் ஏற்றப்படுகின்றன. இந்த சமூகவலைதளங்கள் அனைத்து கட்சியினருக்கும் சமமான பயன்பாடு, வாய்ப்புகளை வழங்குவது இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தவறான தகவல்கள் மூலம் உணர்ச்சி ரீதியாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தூண்டப்படுகின்றனர். இதை வைத்து பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. பெரிய சமூக ஊடக நிறுவனங்களுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் இடையேயான உறவு வளர்ந்து வருவதையும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

கட்சி மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு யாராக இருந்தாலும் ஜனநாயகத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க இதை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x