Published : 02 Jun 2025 12:05 PM
Last Updated : 02 Jun 2025 12:05 PM

கோவில்பட்டியில் பெண் உட்பட இருவர் அடுத்தடுத்து கொலை

பிரகதீஸ்வரன், காயத்ரி

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பெண் உட்பட இரண்டு பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்பட்டி வள்ளுவர் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த ஆனந்தன் மகன் பிரகதீஸ்வரன் (20). ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றிரவு கடலையூர் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் அவரிடம் தகராறு செய்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் பிரகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார், பிரகதீஸ்வரன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோவில்பட்டி செண்பகா நகர் 3-வது தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் வள்ளுவர் நகர் 1-வது தெருவிலுள்ள ஒரு சமுதாயத்துக்கு உட்பட்ட இடத்தில் அமர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர். இதனைப் பார்த்த அந்த சமுதாயத்தின் தலைவர் ரத்தினம் என்பவர் அவர்களை கண்டித்துள்ளார். அப்போது அவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சமுதாய தலைவர் ரத்தினத்துக்கு ஆதரவாக பிரகதீஸ்வரன் இருந்துள்ளார். அவரிடம் வழக்கை வாபஸ் பெறும்படி சதீஷ் உள்ளிட்டோர் மிரட்டி உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு பிரகதீஸ்வரன் கடலூர் சாலையில் நின்ற போது அங்கு வந்த சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் வழக்கை வாபஸ் பெறுவது குறித்து கேட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் இடையே ஏற்பட்ட வாய் தகராறில், ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் பிரகதீஸ்வரனை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கோவில்பட்டி புதுக்கிராமம் செண்பகா நகர் 3-வது தெருவில் உள்ள சதீஷ் வீட்டுக்கு சென்ற ஒரு கும்பல், அங்கிருந்து அவரது தாய் காயத்ரியை (46) கத்தியால் தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த அவரது சகோதரர் செண்பகராஜ் (44) என்பவரும் தாக்கப்பட்டார். இதில் காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த அந்த சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார், காயத்ரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரகதீஸ்வரன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள சதீஷின் தாய் கொலை செய்யப்பட்டது, பழிக்கு பழியாக நடந்த கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக பிரகதீஸ்வரன் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும், காயத்ரி சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

மேலும், புது கிராமம் பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த 2 கொலைகள் தொடர்பாக 7 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு அடுத்தடுத்து இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x