Published : 31 Oct 2025 03:48 PM
Last Updated : 31 Oct 2025 03:48 PM

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான நவம்பர் மாத பலன்கள் @ 2025

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராகு - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த மாதம் அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்களுக்கு எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம். குடும்பத்தில் சுப காரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதே நேரத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது.

திருவோணம்: இந்த மாதம் தடைபட்ட காரியங்கள் தடை நீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் கடுமையான உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த மாதம் எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: வாராகி தேவியை வணங்குவது நன்மை தரும் | சந்திராஷ்டம தினங்கள்: நவம் 13, 14, 15 | அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 23, 24 |

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - தொழில் கர்ம ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த மாதம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடு படுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பண வரத்து அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பெண்களுக்கு அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்.

சதயம்: இந்த மாதம் வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலம் இது. வாய்ப்புகள் குவியும். புத்தி சாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப்பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: அம்மனை வணங்குவது மூலம் நன்மை உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: நவம் 16, 17 | அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 25, 26, 27 |

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த மாதம் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். முதலீடுகளில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்கு வாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.

உத்திரட்டாதி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.

ரேவதி: இந்த மாதம் பெண்களுக்கு எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

பரிகாரம்: சாய் பாபாவை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: நவம் 18, 19 | அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 01, 02, 28, 29 |

இந்த மாதம் கிரகங்களின் நிலை:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x