“திமுகவுடன் காங். பயணித்தால் தான் வலதுசாரி அரசியலை தடுக்க முடியும்!” - பீட்டர் அல்போன்ஸ் நேர்காணல்


’திமுகவுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை என்கிறார்’ முன்னாள் காங்கிரஸ் எம்பியும், தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ். கோவேக்சின் சர்ச்சை பின்னணி என்ன?, காங்கிரஸ் கட்டமைப்பு பற்றி, திமுகவுடன் பயணிப்பது ஏன்? எனப் பல கேள்விகளுக்கும் பதிலளித்துள்ள அவரது நேர்காணலின் இரண்டாம் பகுதி இது...

‘திமுகவுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை என்கிறார்’ முன்னாள் காங்கிரஸ் எம்பியும், தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ். கரோனா தடுப்பூசி சர்ச்சை பின்னணி, காங்கிரஸ் கட்டமைப்பு, திமுகவுடன் பயணிப்பதன் காரணம் என பலவற்றையும் வெளிப்படையாக பகிரும் அவரது நேர்காணலின் இரண்டாம் பகுதி இது...

கரோனா தடுப்பூசி தொடர்பாக எழுந்த சர்ச்சையில் தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் நீக்கப்பட்டுள்ளதே. அது குறித்து உங்கள் கருத்து என்ன?

அதேபோல், அப்போது ’பிஎம் கேர்ஸ் நிதி’ பெறப்பட்டது. அந்தத் தொகை யாருக்காக செலவு செய்யப்பட்டது என்பது புரியாத புதிராகவுள்ளது. மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படவில்லை, புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர போக்குவரத்து ஏற்பாடும் செய்யவில்லை. அப்படியானால், பிஎம் கேர்ஸ் நிதி தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என சொல்லப்பட்டது. ஆனால், அது தயாரிப்பதற்கு வெளிநாட்டு வங்கிகளில் இந்தியா கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த பிஎம் கேர்ஸ் நிதி எதற்காகப் பயன்பட்டது என்பது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு வெளிவரும்.”

இந்தியாவில் கரோனா உச்சக்கட்டத்தில் இருந்தது. இந்தத் தடுப்பூசிதான் பெரும் உயிர் சேதத்தைத் தடுத்து மக்களைக் காப்பாற்றியது எனக் கூறுகிறார்களே?

“முறையாக ஒரு தடுப்பூசியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கருத்து. ’தடுப்பூசி’ என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. குண்டூசி கூட தயாரிக்கப்படாத இந்தியாவில் தட்டம்மை, பெரியம்மை, போலியோ, காலரா, மஞ்சள் காமாலை, டிபி எனப் பல நோய்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். ஆனால், அதை அரசாங்கத்தின் கடமையாகத்தான் காங்கிரஸ் எண்ணியது. கட்சி அதனைக் கொண்டாடவில்லை. அதேபோல், பெருந்தொற்று காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் ஒரு தடுப்பூசி செலுத்தியது கட்சிக்கு எப்படி பெருமை ஆகும். அதை எப்படி சாதனை என சொல்லி பாஜகவால் கொண்டாட முடிகிறது என்பதுதான் எங்களின் கேள்வி”.

உங்களுக்கு மக்களவையில் எம்.பி சீட் தரப்படவில்லையே? காரணம் என்ன?

“(சிரிப்புடன்)... திருநெல்வேலியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். ஆனால், கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை.”

எம்பி சீட் மறுப்பிற்குப் பின்னால் ‘நீங்கள் திமுககாரர்’ என்னும் விமர்சனம் இருப்பதாக சொல்லப்படுகிறதே?

“தினமும் ஊடகத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் குறித்து பேசுகிறேன். இவர் வேலை செய்யவில்லை, தேர்தல் பணி செய்யவில்லை என என் மீது குறை சொல்ல முடியாது. அதனால், இப்படி விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஏறக்குறைய திமுக கொண்டுள்ள கோரிக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. குறிப்பாக, மாநில உரிமைகள் , நீட் ரத்து மற்றும் கல்வி பொதுப் பட்டியலுக்கு கொண்டுவரப்படுவது என பல அம்சங்கள் திமுக கூறியதுதானே.

காங்கிரஸில் வலுவான கட்டமைப்பு இல்லை என்கிறீர்கள். ‘இண்டியா’ என்னும் பெரிய கூட்டணியை வழிநடத்தி செல்ல காங்கிரஸால் முடியுமா?

“இந்தியாவில் வரும் காலத்தில் இரண்டு தத்துவங்கள் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். ஒரு தத்துவத்துக்கு காங்கிரஸும், மற்றொரு தத்துவத்துக்கு பாஜகவும் தலைமை தாங்கும். அதற்கு கீழ் மற்ற கட்சிகள் ஒன்றிணைவார்கள். ‘முதலில் வலுவான கூட்டணி அமையாது’ என்று இண்டியா குறுகிய காலத்தில் சவாலான நேரத்தில் பல மாநிலங்களில் எதிர்பாராத ஒற்றுமை ஏற்பட்டு கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைந்துள்ளது.”